Friday, July 19, 2019

மாணவர்களின் புள்ளிவிவரங்கள் பதிவேற்றம்: அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

No comments :

மாணவர்களின் புள்ளிவிவரங்கள் பதிவேற்றம்: அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை


தமிழ்நாடு முழுவதும் படிக்கக்கூடிய மாணவர்களுடைய புள்ளிவிவரங்களை சரியான முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:பள்ளிக் கல்வித்துறையின் கல்வியியல் மேலாண்மை தகவல் முகமை ("எமிஸ்') குறித்து துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அதில் மாணவர்களின் சேர்க்கை விவரமும், "எமிஸ்' தளத்தில் உள்ள சேர்க்கை விவரமும் வேறுபட்டுள்ளது தெரியவந்தது. இது அலுவலர்களின் கவனக்குறைவைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு செயலர் கூறியுள்ளார்.எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் விவரங்களையும் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் ஜூலை24-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும், "எமிஸ்' தளத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரமும் வேறுபாடு இருக்க கூடாது.வேறுபாடு இருக்கும் பட்சத்தில் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அதே நேரத்தில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும், "எமிஸ்' தளத்தில் உள்ள மாணவர்களின் சேர்க்கை விவரத்தையும் வகுப்பு வாரியான அறிக்கையாக, பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சலுக்கு ஜூலை 25-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் அனுப்ப வேண்டும். இந்தப் பணிகளை வரும் 25-ஆம் தேதி முதல் இணை இயக்குநர்கள் ஆய்வு செய்யவுள்ளனர் என அதில் கூறியுள்ளார்.

காரணம் என்ன?:

 பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையன்று அந்தத் துறை சார்பில் சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்கள் அடங்கிய ஆவணப் புத்தகம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் உள்ள புள்ளிவிவரங்களுக்கும் 2018-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்களுக்கும் மிகப் பெரியளவில் வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, "எமிஸ்' தளத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

No comments :

CLOSE ADS
CLOSE ADS